Friday, April 18, 2008

ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள்



தமிழகத்தைச் சேர்ந்த அ.மங்கை அவர்கள் தொகுத்த ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைத் தோகுபான ''பெயல் மணக்கும் பொழுது'' எனும் நூலை பற்றி சமீபத்தில் வந்த மல்லிகை 43வது ஆண்டு மலரில் என்னால் கட்டுரை உங்கள் பார்வைக்கு.......


''பெயல் மணக்கும் பொழுது"" ஈழ பெண் கவிஞர்களின்
கவிதைத் தொகுப்பினை முன் வைத்து-


(1)
தமிழ் கலை இலக்கியப் பரப்பின் வளர்ச்சிக்கு தொடக்க காலம் முதல் நவீன யுகம் வரை பெண்கள் கணிசமான பங்கினை ஆற்றிச் சென்றுள்ளனர். இன்று வரை பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் 'பெண்ணிய எழுத்து" என்ற குறித்த அடையாளத்துடன் பெண்கள் தமிழ் கலை இலக்கிய சூழலில் படைக்க வந்ததும், அப்படைப்புக்களை பெண்ணிய நோக்குடன் பார்க்கும் முறைமை 20 நூற்றாண்டின் கடைசி சகாப்தத்தில் சாத்தியமாக்கியது. அவ்வாறான நோக்குடன் படைக்கப்பட்ட பெண்ணிய எழுத்துக்களில் வெளிப்பட்ட, கருத்துக்களையும் சேதிகளையும் எதிர் கொண்ட ஆணாதிக்க சக்திகள், அப்பெண்கள் படைப்புக்களை பற்றியும் அப்படைப்புகளை படைத்த பெண்களைப் பற்றியும் மிக மோசமாக விமர்சித்ததன் மூலம், தம் வக்கிர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டன.

பெண்ணின் நடையையும், உடையையும், தொடையையும், இடையையும் வர்ணித்து ஆக்கிய பாடல்களையும் கவிதைகளையும் எழுதிய ஆண் கவிஞர்களின் படைப்புக்களையிட்டு எந்தவொரு எதிர்வினையும் காட்டாது மாறாக அக்கவிஞர்களுக்கு கவிமகாராஜாக்கள் என்றெல்லாம் பட்டங்களை வழங்கி, பொன்னாடை போர்த்தி பூமாலை சூட்டி கௌரவம் செய்து ஆணாத்திக்க சக்திகள் தம் வக்கிரங்களை நிலை நாட்டிக் கொண்டன.
ஆனால், தம் உடல் குறித்த படைப்புக்களை,பெண்கள் படைத்ததுடன், அப்படைப்புக்களில் அவர்கள் கையாண்ட உடல் சார்ந்த சொல்லாடல்களையும் எதிர் கொண்ட ஆணாதிக்க சக்திகள், அப்படைப்புக்களை ஆபாச இலக்கியம் என பிரசாரம் செய்தன.
இத்தகைய சூழலின் மத்தியிலும் பெண்ணிய எழுத்து என்பது தனித்த ஒர் இயக்கமாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.
(2)
பெண்ணிய எழுத்து இயக்கத்தின் இந்த ஸ்திரமான வளர்ச்சிக்கு தமிழகத்து பெண் படைப்பாளிகளால் படைக்கப்பட்ட படைப்புக்கள் (குறிப்பாக கவிதைகள்) மிகவும் துணை புரிந்தன எனலாம். இவர்களின் அக்கவிதைகள் ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் பெண்ணின் உடல், கண்காணிக்கப்படும் விதத்திற்கும், அது பயன் படுத்தப்பட்ட முறைமைக்கும், அச்சமூக கட்டமைப்பின் ஒரு கூறான குடும்பம் எனும் கட்டமைப்பில் பெண் எனும் ஜீவன் நோக்கப்பட்ட விதத்திற்கும் எதிரான குரல்களாக அப்பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் அமைந்தன. அதே வேளை, வெறுமனே தமிழ் பெண் எனும் அடையாளத்தை கடந்தும் தலித், முஸ்லிம் போன்ற சமூக வகுப்பினரின் பெண்களுக்கான பிரச்சினைகள் வேறுபட்டவை. தனித்துவமானவை என்ற கருத்தும் வலு பெற்றது. அதன் காரணமாக அத்தகைய சமூக வகுப்பினரில் தோன்றிய பெண் படைப்பளிகளின் படைப்புக்கள் வெளிப்படுத்திய சேதிகளும், பிரச்சினைகளும் வேறுபட்டு வெளிப்பட்டன. இந்த போக்கு பெண்ணிய எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இத்தகைய ஓரு சூழலில்தான் இலங்கையிலிருந்து பெண் படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய முதல் தொகுதியாக ''சொல்லாத சேதிகள்'' வெளிவந்தது. சொல்லாத சேதிகள் (இவ்விடத்தில் இத்தகைய ஒரு தொகுப்பு வெளிவரக் காரணமாக அமைந்த சித்திர லேகா மௌனகுரு அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.)தொகுப்பு வரும் வரை ஈழத்து தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகள் தமிழக பெண் கவிஞர்கள் கவிதைகள் பார்க்கப்பட்ட பெண்ணிய விமர்சன நோக்கிலேயே பார்க்கபட்டுக் கொண்டிருந்தன.
ஆனால், சொல்லாத சேதிகள் மற்றும் அதற்கு பின்னால் வெளிவந்த ஈழத்து பெண் கவிஞர்களின் தொகுப்புக்கள் மூலம்-,(இலங்கையிலிருந்து வெளிவந்த 'உயிர்வெளி" எனும் தொகுப்பும் தமிழ் பெண்ணிய கவிதைகளின் இன்னொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டியது. காதல் உணர்வுக்கு ஆட்பட்ட பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் பெண்களின் குரல்களாக இத்தொகுப்பில் பதிவாகி இருந்தன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் கொண்டிருந்த போக்கினை பற்றிய விரிவான ஓரு முன்னுரை சித்தரலேகா மௌனகுரு அவர்களால் எழுதப்பட்டுள்ளது.)
ஈழத்து பெண் கவிஞர்களின் படைப்புக்கள் சொல்லும் சேதிகளும், முன்வைப்புக்களும், தமிழக பெண் படைப்பாளிகளின் படைப்புக்களிலிருந்து வேறுபட்டவை என்பதை விட,மேலதிகமான பல பண்புகளைக் கொண்டவை என்பதை தமிழக, ஈழத்து பெண்ணிய எழுத்து இயக்க ஆர்வலர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கு காரணம், தமிழக பெண் படைப்பாளிகள் சந்தித்திருக்காத பல்வேறான புதிய அனுபவங்களை ஈழத்து பெண் படைப்பாளிகள் சந்தித்து கொண்டிருந்தமைதான்.

போர்க்கால சூழல், போரக்கள சூழல் என இவ்விரு சூழல்களினூடாக வெளிப்பட்ட ஈழத்து பெண்கள் மீதான இராணுவ ரிதீயான வன்முறை, போராட வேண்டிய தேவை, புலம்பெயர்ப்பு, இடப்பெயர்வு, போன்றவைகளின் மத்தியில், ஆணாதிக்க சக்திகளால் மதம், பண்பாடு, கலாசாரம், குடும்பம், ஒழுக்கம், சாதியம், இயக்கம் என்பன போன்றவற்றின் பேரால் பெண் என்பவள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, செலுத்தப்பட்ட அதிகாரம், மறுதலிக்கப்பட்ட இருப்பும், அடையாளமும் போன்ற மரணத்தையும் வாழ்வையும் ரொம்பவும் அருகே வைத்திருந்த நிகழ்வுகளின் மத்தியில், எழுத வந்த ஈழத்து பெண் படைப்பாளிகள் கவிதை கள் பெண்ணிய எழுத்து இயக்கத்தில் இதுவரை ''சொல்லாத சேதி""களாக இருந்தமையால் அப்படைப்புக்கள் கவனத்தை பெற்றன.

இவ்வாறான தனித்துவப் போக்குகளின் காரணமாக தமிழக பெண்ணிய இயக்க ஆர்வலரின் கவனத்தை ஈழத்து பெண் கவிதைப் படைப் பாளிகளின் கவிதைகள் அதிக அளவில் ஈர்த்த பொழுது தமிழகத்திலிருந்தும் ஈழத்து பெண் கவிஞர் களின் தனித்தொகுப்புக்களும், தமிழக பெண்ணிய இயக்க ஆர்வலர்களின் முயற்சியினால் பல தொகுப்பு நூற்களும் வெளி வரத்தொடங்கின. அவ்வாறாக வெளிவந்த தொகுப்புகளில் ஒன்றாக அ.மங்கை தொகுத்து 2007 ஆம் ஆண்டு மே மாதம் 'மாற்று" வெளியீடாக வெளி வந்திருக்கும் 'பெயல் மணக்கும் பொழுது" எனும் தொகுப்பாகும்.

(3)
அ.மங்கை அவர்கள் தொகுத்திருக்கும் இத்தொகுப்பில் ஈழத்து பெண் கவிஞர்களின் படைப்புக்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக, அத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கும் முறையை பற்றியும், அதனையொட்டிய சில விடயங்களைப் பேச வேண்டியிருக்கிறது.

முதலில் இத்தொகுப்பின் தலைப்பையிட்டு பேச வேண்டும். இத்தொகுப்பை என் கையில் கண்ட சிலர் 'பெயல் மணக்கும் பொழுது" எனும் இத்தொகுப் பின் தலைப்பிலுள்ள 'பெயல்" என்றால் என்ன? என கேட்டார்கள். நானும் அச்சொல்லை பற்றி அறிந்து கொண்டதனால் விளக்கம் சொன்னேன். அவர்களை பொறுத்த வரை அவ்விளக்கம் வெறுமனே ஒரு வார்த்தைக்கான விளக்கத்துடன் முடிந்து விட்டது. ஆனால், மங்கை அவர்கள் அச்சொல்லை யிட்டு சொல்லியிருக்கும் வார்த்தைகள் மூலம் அச்சொல்லுக்கான விளக்கத்துடன், அத்தொகுப்பி லுள்ள கவிதைகளின் தன்மையை மிக சரியாக இனங்காட்டியிருக்கிறார். அவரது அக்கூற்றின் சில வரிகள் தமிழ் பெண்ணிய எழுத்துக்கும் மிகப் பொருத்தமான வரிகளாக அமைந்துள்ளன.

மங்கை அவர்கள் தன் தொகுப்புரையில்-

'பெயல் மணக்கும் பொழுது" என்ற தலைப்பின் பின்புலத்தைச் சொல்லவேண்டிய அவசியம். மஹாஸ்வதாதேவியின் குருN~த்திரத்திற்குப் பின் என்ற சிறுகதையில் யுத்தத்தில் மாளும் காலாட்படையினரின் இளம் மனைவியர் ஐவர். இளம் விதவையும் கர்ப்பிணியுமான உத்தரையின் தோழி களாக அரண்மனையில் வசிக்கின்றனர். அரண் மனைவாசிகளான பெண்களுக்கு மத்தியில் இந்த ஐவரும் புதியதொரு சக்தியோடு உலவுகின்றனர். ஓரு நாள், முதல் மழையின் வாசம் எழுகி;றது மண் ஆறுகிறது. இந்த ஐவரும் தமது நாடு செல்ல ஆயத்தமாகின்றனர். விவசாயம் தொடங்கும் பருவம். குவியல் குவியலாகச் சடலங்களை எரித்த சூடு
கால்களைத் தீய்த்ததால், குருஸேத்திர மண்ணில் நடக்க முடியாது. அரண்மனையில் தங்கிவிட்டதைச் கூறுகின்றனர். இப்போது- முதல் மழையில் மண் ஆறுகிறது. பயிர் தழைக்க வேண்டும். இதுவே பெயல் மணக்கும் பொழுது தொகுப்பின் ஆதார சுருதி.ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்தி லும் சொல்லிலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது. சளியும் மூத்திரமும் சீழும் உதிரமும் பாலும் கண்ணீரும் ஒழுகும்; வழியும், மடைகடந்து பாயும் போது அதன் மணமும் நாற்றமும்(!) வீச்ச மடிக்கலாம்.ஆனால் அது உயிர்ப்பின் அடை யாளம்."

தொகுப்பாளர் என்ற முறையில் மங்கை அவர்கள், இத்தொகுப்பை தொகுப்பதில் பெரும் சிரமத்தை மேற் கொண்டிருக்கிறார் என்பதை அவரது தொகுப்புரை வாசகங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அத்தகைய சிரமங்களில் ஒன்றாக ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், கவிதைத் தொகுப்புகளையும் தேடுவதில் அவர் பாரிய சிரமத்தை கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

(அந்த வகையில் தமிழகத்தில் டிசம்பர் 2004 இல்; மாங்குயில் பதிப்பக வெளியீடாக வெளிவந்த இலங்கை பெண் படைப்பாளியான கெக்கிராவ ஸஹானாவின் 'இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்" எனும் தொகுதியினை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறாக அவரது கவனத்திலிருந்து தப்பிய அல்லது அவருக்கு கிடைக்காத தொகுதிகள் இன்னும் இருக்கலாம். அவை பற்றிய தகவல்களை கூறுவது மூலம், எதிர்காலத்தில் மங்கை அவர்கள் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்தல் பணிக்கு உதவியாக இருக்கும் என்ற முறையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.)

அடுத்து அவர் சந்தித்த இன்னொரு பாரிய பிரச்சினைதான் ஈழத்தில் சில ஆண் கவிஞர்கள் பெண்களின் பெயரில் எழுதி இருந்தமைதான்.. அத்தகைய கவிதைகளை இனங்காணுவதில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு ஈழத்து நண்பர்கள் சிலர் உதவியதாக தொகுப்புரையில் கூறுகிறார். ஆனால், அந்த நண்பர்களின் உதவியையும் மீறியும், 'நாச்சியாதீவு பர்வீன்" எனும் ஈழத்து ஆண் கவிஞரின் கவிதை அத்தொகுப்பில் இடம் பெற்று விட்டது. இந்த தவறுக்கு காரணம் அவருக்கு உதவிய ஈழ நண்பர்களுக்கு ஈழத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆண்களுக்கும் பர்வீன் என்ற பெயர் வைப்பது உண்டு எனும் தகவல் தெரியாமல் இருந்திருக்கலாம்.

மேலும் இத்தொகுப்பில் ஈழத்து வடக்கு கிழக்கு பிரதேசத்தை தவிர்த்த பிரதேசங்களிலிருந்து எழுதும் பெண் கவிஞர்கள் கவிதைகளையிட்ட பங்களிப்பு நம்மால் காணமுடியவில்லை. குறிப்பாக மலையக பிரதேசத்தைச் சார்ந்த பெண் கவிஞர்களின் கவிதைகளையும் மங்கை அவர்களின் கவனத்திற்கு அத்தொகுப்புக்கு உதவிய ஈழத்து நண்பர்கள் கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறான பணிக்கு மங்கை அவர்கள் இத்தொகுப்பு வெளி வருவதற்கு முன்னதாக மார்ச்-2000 இல் அந்தனி ஜீவா அவர்கள் தொகுத்த 'குறிஞ்சி குயில்கள" எனும் தொகுப்பு அந்த நண்பர்களின் கவனத்திற்கு வரா மல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. (அல்லது அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மலையக பெண்களின் கவிதைகளில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் இருக்கவில்லை என்று கருதினார் களோ என்னவோ?)

அதே போல் மங்கை அவர்களின் இத்தொகுப்பு வெளிவருவதற்கு முன்னதான காலகட்டத்தில் ஈழத்து தேசியப் பத்திரிகைகளிலும் , மல்லிகை, ஞானம், தாயகம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்த, தனித் தொகுப்புகளை வெளியிடாத பெண் கவிஞர்களின் கவிதைகளை இன்னும் பரவலாக மங்கை அவர்களின் கவனத்திற்கு அந்த நண்பர்கள் கொண்டு வந்திருக்கலாம்.
மல்லிகை, (மங்கை அவர்களுக்கு கிடைக்காத தொகுதிகளில் ஒன்றான பாலரஞ்சனி சர்மா வின் 'மனசின் பிடிக்குள்" எனும் தொகுப்பு மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த தொகுப்பு என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.) ஞானம், தாயகம் போன்ற சஞ்சிகைகள் அவரது பார்வைக்கு வந்திருந்தாலும் அது போதாது என்றே சொல்ல வேண்டும்)அவ்வாறாகக் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், இத்தொகுப்பில் நாச்சியாதீவு பர்வீன் எனும் ஆண் கவிஞரின் கவிதை இடம் பெற்ற தவறை தடுத்திருக்கலாம்.
மேலும், இன்னும் பல பெண் கவிஞர்களின் கவிதைகள் குறிப்பாக வட-கிழக்கு தவிர்ந்த பிரதேசத்தைச் சார்ந்த பெண் கவிஞர்களின் கவிதைகள்(சந்திரகாந்தா முருகானந்தன், பிரமிளா செல்வராஜா போன்ற இன்னும் பல பெண் கவிஞர்களின் கவிதைகள்) மங்கை அவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

மங்கை இத்தொகுப்பின் பணியின் பொழுது நாம் மேற் குறிப்பிட்ட விடுபட்டவைகள் சுட்டி காட்டு வது என்பது இத்தகைய ஓரு பாரிய தொகுப்பை மங்கை அவர்கள் செலுத்திய உழைப்பில் குறை காணுவது அல்ல நம் நோக்கம். அவரே தனது தொகுப்புரையில்-

'இத்தொகுப்பைப் பற்றி நினைக்கும் போது எனக்கு சில அச்சங்கள் ஏற்படுகின்றன.இதில் வந்துவிடக் கூடிய தவறுகள் எனது தூக்கத்தை குலைக்கின்றன. தயவு செய்து தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைச் சரி செய்வதற் கான வாய்ப்புக்கள் நிச்சயம் உண்டு என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்."

என கூறுவது தொகுப்பாளர் என்ற முறையிலான அவரது நேர்மையை எடுத்துக் காட்டுகிறது என்பதையும் இங்கு பதிவு செய்யவேண்டியிருக்கிறது.

மேற்குறித்த விடுபட்டவைகளுக்கு அப்பாலும், மிகுந்த சிரத்தையுடனும், சிரமத்துடனும் மங்கை அவர்களால் தொகுத்தப்பட்ட 'பெயல் மணக்கும் பொழுது" எனும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை கொண்டு பார்குமிடத்து கவனத்திற் குரிய ஒரு தொகுப்பு என்பது மறுப்பதற்கில்லை.

(4)
இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 124 கவிதைகளும் (125 தான் ஒரு கவிதை ஆண் கவிஞரின் என்பதனால் 124) பெண்களால் எழுதப்பட்ட படைப்புக்கள் எனும் நம்பிக்கையுடன் ஒரு சேரப்பயின்ற பொழுது மொத்த கவிதைகளையும் இரு பெரும் பிரிவுகளாக பிரித்து விடலாம் போல் தோன்றுகிறது.

1. பெண்ணிய அடையாளம் இல்லாமல் எழுதப்பட்ட கவிதைகள்.

2. பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்து எழுதிய படைப்புக்கள்.

இவ்விடத்தில் பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்தல் என்பது மொழியை அடிப்படையாக கொண்டு பெண்களால் படைக்கப்படும் இலக்கியப் பிரதிகளில் பெண் மொழி, மற்றும் கையாளும் மொழியின் அரசியல் என்பனவற்றோடு இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..
அந்த வகையில், காலம் காலமாக தமிழ் மொழியில் கட்டமைக்கபட்டிருக்கும் ஆணிய சொல்லாடல்களையும் இத்தொகுப்பிலுள்ள ஒருசில பெண் படைப்பாளிகளும் பயன்படுத்தி இருக்கிறார்கள். உதாரணமாக 'மனிதன்", 'புதல்வர்கள்", 'இளைஞர்கள்" ( இச்சொற்களை மொழியியல் ரிதீயாக நின்று தமிழ் மொழி இலக்கணத்தை கொண்டு ஆண்பால், பெண்பால், பொது பால், பொதுபெயர் என்றெல்லாம் நோக்கும் மரபு நம் மத்தியில் இருப்பினும் கூட,) இச்சொற்களில் நடைமுறையிலும், யதார்த்தத்திலும், வெளிகொணரப்படும் ஆணிய அடையாளத்தை மறுக்கும் வகையில் மனுஷி, புதல்விகள் போன்ற சொற்களை கையாளுவதில் அவ்வளவு அக்கறை கொள்ள வில்லை போல் தெரிகிறது. இந்த இடத்தில்தான் பெண் மொழியிட்ட பிரக்ஞை பெண் படைப் பாளிகளுக்கு இருக்க வேண்டும் என பெண்ணிய சிந்தனையாளர்களால் வலியுறுத்துப்படுவதை நாம் நினைவு கொள்ள வேண்டி இருக்கிறது.

இத்தகைய கவிதைகள் இன்னொரு ஆபத்தை யும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதாவது பேச வந்த பிரச்சினை பெண்ணிய பிரச்சினையாக இருந்தும் அக்கவிதைகள் எழுதப்பட்ட சொல்லாடல்களின் காரணமாக அக்கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்களின் பெயரை எடுத்து விட்டால், அக்கவிதை எழுதியவர்களின் பால் அடையாளத்தை இனங்காண முடியாத அல்லது ஆண் ஒருவர் எழுதிய கவிதைகளாக மிஞ்சி விடும் ஆபத்தும் இருக்கிறது.(உதாரணத்திற்கு. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆதிராவின் தலைப்பில்லா கவிதையினை (பக்கம் 35) சொல்லலாம். இப்படி சொல்வதற்கு அக்கவிதை யில் இடம் பெற்றுள்ள 'நான் மனிதனாய் மிருகமாய் கடவுளாய் (?)" எனும் வரிகள் ஏதுவாகின்றன.)

ஒட்டுமொத்தமான சமூகத்திற்காய் பொதுவான நிலை நின்று ஒரு படைப்பாளி என்ற முறையில் குரல் கொடுக்கும் பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. அக்கவிதைகளில் பெண்ணிய அடையாளம் திறந்த முறையில் இல்லாவிடினும் அக்கவிதைகள் பேசும் பிரச்சினைகளின் காரணமாகவும் ஆண்களுக்கு சமனாக இப்பிரச்சினைகளை பற்றி பெண்களாலும் எழுத முடியும் என்பதை எடுத்துகாட்டி நிற்பதனாலும் நம் கவனத்தை இத்தகைய கவிதைகள் பெறுகின்றன.

அத்தோடு பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்து எழுதப்பட்டுள்ள கவிதைகள் என பார்த்தோமானால் அதில் சில கவிதைகள் தாய் களின் குரல்களாக பதிவாக, அத்தாய்மார்கள் தம் 'புதல்வர்களுக்காய்" அழுகின்ற அளவுக்கு தம் 'புதல்விகளுக்காய்" அழவில்லை.

இந்த நிலை நின்று பார்க்குமிடத்து அந்த சில கவிதைகளை எழுதியிருக்கும் பெண் கவிஞர்கள் இன்னும் ஆணில் தங்கியிருத்தல், ஆணை முதன்மைப் படுத்தல் என்ற உணர்வுகளிலிருந்து பிரக்ஞை பூர்வமாக விடுபடவில்லை என எண்ணத் தோன்றுகிறது.

இந்த குரல்களை கடந்து பாரத்தோமானால், போர் காலத்தில் 'பெண்" எனும் ஜீவி எதிர் கொள் ளும் இருப்பையிட்ட நெருக்கடிகள், பெண்ணாய் இருப்பதன் காரணமாக சுயமான இருப்பினூடாக அவள் ஆட்படுகின்ற உணர்வுகள், போர் களத்தில் நின்று போராடும் பெண்களின் பிரகடனங்கள், அதே போர் களத்தில் தன்னுடன் போராடும் தோழிகளுடனான உரையாடல்கள், போர் களத்திற்கு அனுப்பப்பட்ட,- போன, மகளையும் மகனையும் எண்ணி கலங்கும், தைரியமூட்டும்,அல்லது போர் களத்திற்கு போன மகள் தாய்க்கு தைரியமூட்டும் என்ற வகைகளிலான குரல்கள், ஒரே இயக்கத்தில் இருந்தும் தான் பெண்ணாக இருப்பதனால் நிராகரிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்களின் குரல்கள்,;சமூக பண்பாடு, கலாசார கூறுகளை மீறிய நிலை பற்றி கவலைபடாத குரல்கள்,ஆணின மற்றும் பொருளாதார சமூக கட்டமைப்பில் புலம் பெயர்வு, இடப் பெயர்வு சூழல்களிலும் பெண்ணாய் இருப்பதன் காரண மாக சந்திக்கின்ற பிரச்சினைகள் தருகின்ற அழுத்தங்களின் குரல்கள், மறுபுறம் அவ்வாறான பிரச்சினை களை எந்தவிதமான சஞ்சலமின்றி எதிர்கொண்டு ஆணிய சமூகத்திற்கு சவால் விடும் குரல்கள், (இந்த சவால் விடுதல் என்பது ஒரு வகையில் ஆணிய சமூகத் திற்கு எதிரான கலக நடவடிக்கை இக்கவிதை களில் வெளிப்படுவதாகவே நாம் கருதுகிறோம்.) எனப் பலகுரல்கள் கவிதைகளாய் பதிவாகியுள்ளன.

ஆண் இனத்தின் வக்கிரமான முகத்தை என்றைக்குமே ஆணின சக்திகள் ஒத்துக் கொண்டதுமில்லை. ஏற்றுக் கொண்டதுமில்லை. அவ்வாறான ஒரு நிலையில், ஆண் என்ற நிலையில் (உ-ம் கல்யாணியின் தலைப்பில்லா கவிதை-பக்கம்.70) நின்று இத்தொகுப்பில் சில பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகள் வெறுமனே பொது பிரச்சினை களை பற்றி பாடுகின்ற கவிதைகளாக அல்லாமல் ஆண் என்பவனின் நடத்தையில் பொதிந்திருக்கும் வக்கிரத்தை எடுத்துரைப்பது ஆணிய சக்திகளுக்கு எதிரான ஒரு அடியாக விழ, அதே அடி ஆண் -பெண் உறவிலுள்ள சமத்துவமின்மையை எடுத்துரைக்கும் இத்தொகுப்புக்கான பெண் கவிஞர்களின் கவிதை குரல்களின் மூலமும் விழுகிறது.

மேலும்,பெண் உடல் மீதான வன்முறை என்பதை யிட்ட தமிழக பெண் கவிஞர்களின் கவிதைளில் வெளிப்படும் வன்மத்தை விட, அதிகார சக்திகளின் காவலாளிகள் எனும் அங்கீகாரம் பெற்ற அந்நியர்களாலும் சரி (உ-ம், கலாவின் 'கோணேஸ்வரிகள" ஆழியாளின் 'மன்னம்பரிகள்") படுக்கையறை எனும் வெளிக்குள் கணவர் எனும் அதிகாரம் பெற்ற காவலாளிகளாலும் சரி, (உ-ம் மைதிலியின் 'பொருள்",) தன் உடல் மீது புரியப் படும் பலாத்காரத்தையும், இயந்திரபாங்கான உறவையும் பேசுகின்ற ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் வன்மம் அழுத்த மிக்கது
என்பதையும் இத்தொகுப்பில் பல கவிதைகள் காட்டி நிற்கின்றன.
இந்த அழுத்தமிக்க வன்மம் என்பது ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கான தனித்துவத்தின் முக்கிய கூறாகும்.

இவ்வாறாக பன்முகதன்மைமிக்க ஈழப் பெண்ணின் குரல்கள் கவிதைகளாக இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் இடம் பிடித்துள்ள அக்கவிதைகளில் வெளிப்படும் மேற்குறித்த குரல்களையும் அனுபவங்களையும் உள் வாங்கி சொல்கையில்தான், இத்தொகுப்பின் பின்னுரை வழங்கியுள்ள வ. கீதா அவர்கள் தமிழக பெண் கவிஞர்களின் கவிதைகளை பற்றிச் சொல்வது போல் 'தமிழ்நாட்டுப் பெண் கவிஞர்களின் படைப் புக்கள் தன்வயப்பட்ட வெளிப்பாடுகளாக எஞ்சிவிட," அக்கவிதைகளிலிருந்து ஈழத்து பெண்களின் கவிதைகள் வேறு;பட்டு நிற்கும் வெளியினையும், அக்கவிதைகள் தனித்து நின்று வெளிப்படுத்தும் சேதிகளையும் நாம் இனங்காணக் கூடியதாக இருக்கிறது.

அதேவேளை கீதா அவர்கள் அதே பின்னுரை யில் சொல்லாத சேதிகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை பற்றிய முன் வைத்திருக்கும் கருத்துக்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற கவிதைகளுக்கும் பெருந்தும் என நான் கருதுகிறேன்.

அவர் கூறுகிறார்-

'தமிழ்ப் பேசும் உலகில் வழங்கும் கவிதை மரபு அறியாத புதியதொரு படைப்பையும் அது தாங்கி வருகிறது. காதலும், கற்பும், உடலழகும் தாம்பத்தியமும், வீட்டுழைப்பும், தாய்மையும் பெண்ணுக்குரித்தான பிரத்யேக அனுபவங்க ளாகக் கருதப்பட்ட ஒரு பண்பாட்டில், காலம் ஏற்படுத்திய
உடைப்புக்களை 'சொல்லாத சேதிகள்" படம் பிடித்துக் காட்டியது.........................."
எனக் கூறிச் சொல்லும் கீதா அவர்கள், அப்பின் னுரையில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை பற்றி சொல்லும் பொழுது-
'கோபமும் ஆவேசமும் மட்டும் ஈழப் பெண்க ளுக்கு விட்டுவைக்கப்படவில்லை. போர்காலம் தந்த நெருக்கடியில் பறிபோன இடங்கள், காட்சிகள், நினைவுகள், ஆகியவற்றைப் பதிவு செய்யும் அவ லக் கடமையை ஏற்ற கவிஞர்கள" காலைச் செம் மையை ரசிப்பதை 'மறந்து நேற்று வரையும் அமை தியான காலைப் பொழுது" என்ற கோர உண்மை உலகுக்கு அறிவிக்க வேண்டிய வரானார்கள்.. பறிபோன காலத்துக்கு சாட்சி சொல்ல நேர்ந்த அவர் களுக்கு, வேறொரு பணியும் காத்திருந்தது. போர் தொலைத்த, பாதித்த, காத்திருக்கச் செய்த உறவு களின் உன்னதத்தை மட்டுமின்றி அவற்றின் நிலை யற்ற தன்மையையும் இவர்கள் எழுத வந்தனர்."
இக்குறிப்பில் 'போர்காலம் தந்த நெருகக்டியில் பறிபோன இடங்கள்,காட்சிகள், நினைவுகள்." என கூறுகின்ற பொழுது, இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ள அனாரின் 'ஈறல்" எனும் கவிதையும் ,மல்லிகாவின் 'மீண்டும் அங்கிருந்தேன்" எனும் கவிதையும் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றன.
கீதா அவர்களின் இப்பின்னுரை ஈழப் பெண் கவிஞர் களின் போக்கை பற்றியும், தனித்துவத்தை பற்றியும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் காட்டுகிறது.

தொகையில் கூடிய அளவில் பெண்ணிய குரல் களாக அதுவும் ஈழத்து பெண்ணிய குரல்களாக இக்கவிதைகள் வெளிப்படுவதின் காரணமாக மங்கை அவர்கள், தொகுத்திருக்கும் 'பெயல் மணக் கும் பொழுது" எனும் இத்தொகுப்பு மிகுந்த கவனத்தை பெறுகின்றதோடு, பெண்ணிய இலக்கிய பிரதிகள் என்பதற்கான உரையாடலுக்கு சிறந்த முறையில் உதவி புரியும் ஒரு தொகுப்பாகவும் விளங்குகிறது. இதற்கு காரணம் அத்தகைய உரையாடல் மேற் கொள்வதற்கான அதிக அளவான சாத்தியங்களை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள, கவிதைகள் தம்மகத்தே கொண்டுள்ளன என்பதையும் இங்கு அழுத்தி சொல்ல வேண்டி இருக்கிறது.

இக்கட்டுரை குறிப்பின் மூலமும், இக்கட்டுரை குறிப்பில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளை பின்ணிணைப்பாக கொடுத்திருப்பதன் மூலமும் மங்கை அவர்கள் தொகுத்த 'பெயல் மணக்கும் பொழுது" எனும் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பு, மேலும் வாசகர்களால் தேடி படிக்க பட்டு, ஈழத்து பெண்ணிய எழுத்து சம்பந்தமாக, பல்வேறு தளங்களில் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

மேலும் சில இரத்தக் குறிப்புகள்

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போதுதான் முதல் தடவையாக காண்பது போன்று
""இரத்தம்'' கருணையை பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்தக் காட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பி•பி•த்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிகக் குழந்தைத் தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் •வர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன.
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டடே இருக்கிறது.
- அனார்

ஆயிரம் மார்க்குகளை
மணியோடரில் அனுப்பிவிட்டு
இரவில் விழிமூடாமல்
வேலைக்கும் போகாமல்
அத்தானே நீ அங்கு
அவசரத்தில் காத்துள்ளாய்
பத்தாம் திகதியன்று
பதிவுத்திருமணம் பின்
மூன்று நாட்களில்
பெரிய கொண்டாட்டம்
காட்டும் அடிச்சாச்சு
கலியாண வீட்டிற்கு
கமரா மன்னுடனும்
கதைச்சு முடிச்சாச்சு
நேற்று நெடுநேரம்
தொலைபேசியில் நீ.....
வெள்ளைத் தோலும்
வெளியில் ஆடித்திரியாதவளும்
வேண்டுமென்றாய்
உன் பணத்தில்
நான் மொஸ்கோ வந்திறங்கி
பதின்மூன்று மாசமாச்சு.
இருபது மாசமாய்
வாசுகி இங்கு
படாத பாடு படுகிறாள்
கனக்கச் சொல்லியுள்ளன்
எடுப்பம் எடுப்பமென்று
அகலியாவின் அண்ணை
எண்ணூறு டொலர்களை அனுப்பி
அவளை இன்னமும்
ஏன் தான் எடுக்கவில்லையோ?
ஏஜென்சிக்காரன் நேற்று
எனைத்தேடி வந்தான்
விடிய விடியப் பேசு
விரைவில் அனுப்பிறன் என்றான்
பத்தாம் திகதிக்கு
பதினாறு நாள்தானே இருக்கு
அதனாற்தான் அன்றிரவை
அவனோடை கழிச்சிட்டன்
உனக்காக நானென்று
உறுதியான பின்பு
அவசரமாய் எழுதுகிறேன்
இம் மடலை இன்று
அத்தானே நான்
உன்னிடத்தில் வந்திடுவேன்
பத்தாம் திகதிக்கு முன்பு.
- நிருபா

மீண்டும் அங்கிருந்தே...

மீண்டும் அங்கிருந்தே
நன்றாய் இருந்தது எல்லாம்......
இனிய பழைய நாட்களைவிடவும்
நிலத்திற்காகவும் நிலைமைக்காகவும்
சண்டைகள் இனியும் இல்லை.
சொந்த மண்ணில் மகிழ்ச்சியில்
மனிதர்கள் வாழ்ந்தனர் அங்கு.
""ஓம் அதை அவர்கள் செய்துதான் விட்டார்கள்''
யுத்தத்தை நிறுத்திவிட்டார்கள்.
""போதும் போதுமிந்த சவம்பிடித்த யுத்தம்''
என்று சொல்லித் தான் விட்டார்கள்.
யாழ்பாணத்திலும் நிலைமை வழமையாம்
திரும்பவும் நானங்கு போக முடியுமாம்!
வழமைபோல் ஓடினாள்
யாழ்தேவியாள்.
நெரிசலும் இல்லை, வரிசையும் இல்லை
ஜன்னலோர மூலையில்
எனக்கொரு இடம் கிடைத்தது.
அந்த வெக்கையிலும் பணம் இனித்தது
திரும்பும் இடமெல்லாம் நல்லாய்த்தான் இருந்தது.
போய் இறங்கிய பின்னர்
எல்லாம் எனதாய் உணர்ந்தேன்.
பாருங்கள்
எவ்வளவு பெரிய வித்தியாசத்தை
இந்த அமைதி (சமாதானம்) கொடுத்துவிடுகிறது.
எல்லாமே இலகுவாகையில்
கைபடும் தூரத்தில் எல்லாம் இருக்கையில்
சொர்க்கம் இந்த மண்ணில் வருகுதே!
சாதிமத பேதம் இல்லை
உண்ண உணவு நிறைய இருப்பதால்
பசியும் துயரும் பிணியும் இல்லை.
மெத்த மழை நித்தம் பெய்வதால்
துயரம் இல்லை
விவசாயிகள் மனசில் துயரம் இல்லை.
வெங்காயம் மிளகாய் மரக்கறி வகைகள்
பழங்களுக்கும் குறைவில்லை.
இவை ஒன்றுக்குமங்கு வரியுமில்லை.
உடைத்திருந்த நகரைப் பார்க்கப் போனேன்.
போகிற வழியினில் கோவில்கள் கண்டேன்.
அழகான இந்த மண்ணில் போரென்று சொன்னவர் யார்?
அதே அதே அழகுடன் எல்லாம் இருந்தன.
யாழ் நூலக வாசலில்
வண. பிதா லோங்கிற்கு வணக்கம் தெரிவித்தேன்.
""எதுவுமிங்கு எரிந்துவிடவில்லை''
சொன்னார் பாதிரியார் நிமிர்ந்தபடி.
வீரசிங்கம் மண்டபத்திற்கு போனேன் பிறகு.
கட்டி இருந்தார்கள் இனி என்றுமே விழாதபடி.
அன்று அங்கு ஒரு பெண்கள் கூட்டம்
நிறையத் தோழிகளைக் கண்டதில் மகிழ்ச்சி.
பாத்திமா அங்கிருந்தாள்
சித்தியும் நயீமாவுடன்
""நாங்கள் மீண்டும் எங்கள் மண்ணில்''
புன்னகை தவழச் சொன்னாள் சகீமா.
என்னைக் கண்டதில் சாந்தினி மகிழ்ந்தாள்.
""பெண்களின் நிலைமை எப்படி?'' என்றேன்.
""எமக்கெல்லாம் நல்லகாலம்''- என்றவள்
""பெண்களாக மதிக்கப்படுகிறோம்''
""பெருமை தரும் வியந்தானே''
நிகழ்ச்சி ஒழுங்கு வேலைகளில் செல்வி இருந்தாள்.
சிவரமணியோ கவிதை ஒன்றைப் படிக்க இருந்தாள்.
""சமத்துவம் கெளரவம் மனித நேயம் இவற்றுடன்
அவர்களின் அடையாளத்துடன்
பெண்களைப் பார்க்கையில்
எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி''
என்று சொல்லி எதிரொலித்திடும் ஒரு குரல்.
திரும்பினேன்.
வழமையான பிரகாசம் மின்ன
ராஜினி நின்றாள்.
சந்தோசம் மிஞ்சிக் கத்தவும் முடியவில்லை.
விழித்துவிட்டேன்.
கண்டது கனவு.
- மல்லிகா
அம்மா வந்துவிடேன்

அரபு நாட்டு அசிங்கங்களைக் கழுவி
நீ அனுப்பும் ரியாலும், டினாரும்
வேண்டாம்
நீ வேண்டும்
உன் மடியில் முகம் புதைத்து
உன் செல்ல மகள் ஆறுதலடைய வேண்டும்
மொட்டாக இருந்த நானிப்போ
மலர்ந்து புத்தம் புது மலராய்....
இப்போதெல்லாம் என்னிதயம்
உன் அரவணைப்புக்காய், அதிகமாய்
ஏங்குகிறது
வந்துவிட்டேன் தாயே!
அக்காவின் கணவரின்
அந்த இரகசியத்
தொடுகைகள்
அடுத்த வீட்டுக் கிழட்டு மாமாவின்
அர்த்தமுள்ள பார்வைகள்
இளவட்டங்களின் சின்னச் சின்ன
கண் சிமிட்டல்கள்
எதற்குமே அலட்டிக் கொள்ளாத
என் குடிகார அப்பாவோடு
நானும், இளையதுகளும்
நீ வரத்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
எனக்கு "அக்கினிப் பரீட்சை' தான்
உன் அழகு ரோஜாவின் இதழ்கள்
பலவந்தமாய் உதிர்க்கப்பட்டு விடலாம்
காம வல்லூறுகளின் பார்வையிலிருந்து நான்....
நீ வரும் போது உன் மகள்
அக்னிக்கு "ஆகுதீ' ஆகிவிடுவேனோ
என்ற பயம்
அதனால் வந்துவிடேன் அன்னையே
கூழோ, கஞ்சியோ உன்னோடு போதும்.

-லுணுகலை ஹஸீனா புஹார்

Tuesday, November 14, 2006

ஏ.ஜே. பற்றி கிருஷ்ணகுமார்

ஏ.ஜே. பற்றி கிருஷ்ணகுமார்
ஏ.ஜே.பற்றி சொல்ல தகுதியான நபர் இந்த கிரூஷ்குமார்!-மேமன்கவி_எதற்குமே உரிமை கோர விரும்பாத ஞானமே ஏ.ஜே.யின் ஆளுமை[12 - October - 2006] தினக்குரல்ஏ.ஜே. கனகரத்னா அவர்கள் "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்" என்ற முதுமொழிக்கு ஏற்ப வாழ்ந்து தான் கற்றதை தன்னை நாடி வந்தவர்களுக்கு மனநிறைவுடன் பகிர்ந்தளித்து பலருக்கு வழிகாட்டியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தனது அறுபதாவது வயது வரை அங்கு ஆங்கில போதனாசிரியராகப் பணியாற்றியவர். ஆங்கிலம் கற்பிப்பதை தனது பணியாகக் கொண்டிருந்தாலும் இவர் பல்துறை ஆளுமை மிக்க அறிஞராவார். இவருக்கு மிகப் பிடித்த துறைகளாக ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், பத்திரிகை துறை, நவீன சினிமா விமர்சனம், நாடகம் என பரந்து விரிந்து கிடந்தது. Ceylon Daily News, Cooperator, Saturday Review , திசை போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். இதை விட யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை அவைக்காற்று கழகம், யாழ். திரைப்பட வட்டம் போன்றவற்றின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தவர்.தன்னை முன்னிறுத்தாத பக்குவ நிலையை எப்போதுமே அவர் கடைப்பிடித்து வந்தார். எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவையாளர்கள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரிகள் என பல்வேறுபட்டவர்கள் இவரை நாடி வந்து பயன்பெற்றுள்ளார்கள் எவற்றிற்குமே உரிமை கோராத கோர விரும்பாத "ஞானமே" அவருடைய ஆளுமை.கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்" "இலக்கியச் சஞ்சிகை ஜூன் 2006 இதழில் ஏ.ஜே.சிறப்பிதழ்" ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது அத்துடன் கனடா "இலக்கியத்தோட்டம்" அமைப்பு அண்மையில் ரூபா 50,000 மும் சான்றிதழும் வழங்கி மதிப்பளித்தது. "மாக்ஸிசமும் இலக்கியமும்" "செங்காவலர் தலைவர் யேசுநாதர்" "மத்து" போன்ற நூல்களின் ஆசிரியரான இவர் சென்ற ஆண்டு "Selected Works of Regi Siriwardena" என்ற நூலை இருபாகங்களாக தொகுத்து வழங்கியுள்ளார். இதைவிட ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பல்வேறு ஈழத்து இலக்கியங்களை மொழி பெயர்த்து அவற்றை முழு உலகமும் அறிய வகை செய்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் வித்துவச்செருக்குக் கொண்ட பழைய கல்வியாளர்களின் பாரம்பரியம் ஒன்றிருந்தது. அதேபோன்று நிறுவன அங்கீகாரத்துடன் கூடிய அதிகாரம் மிக்க நவீன கல்வியாளர்களின் பாரம்பரியமும் இருக்கிறது. ஆனால் ஏ.ஜே.இவையிரண்டிலுமிருந்து விலகிய ஒரு இலக்கியச் சித்தரே. இறுதிவரை யாழ்ப்பாண மண்ணைப் பிரிய விரும்பாத ஏ.ஜே.யை காலம் நோய்வடிவால் வந்து கொழும்பில் வழியனுப்பியது.- இ.கிருஷ்ணகுமார் -

வெற்றி பெற்ற மனிதரெலாம்.........

சில வேளை நாம் புத்தாலிகள் என நினைப்பவர்கள் புத்திசாலிகள் இல்லை
என்பதை நிரூபிக்கும் ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்கு.....


பத்தி : ஒரு புத்தகம் ஒரு பார்வை
அமெரிக்காவின் முட்டாள்கள்
- பி.ஏ. கிருஷ்ணன்-



1

மனித குலத்தின் பொதுச் சொத்துக்களில் முட்டாள்களும் அடங்குவர் என்பதைப் பற்றி நான் மிகத் திடமாக இருக்கிறேன். முட்டாள்கள் இல்லையென்றால் வாழ்க்கை தனது சமன்பாட்டை, சிரிப்பை, மெல்லிய தருணங்களை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனக்கு முட்டாள்களைப் பிடிக்கும். பல வருடங்கள் நினைவில் பொதிந்து வைத்து அசை போட்டுச் சிரிக்கவைக்கும் இன்பத்தைக் கொடுப்பவர்கள் அநேகமாக அவர்கள் மட்டுமே.

நான் வேலை சேர்ந்த புதிதில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த கடற்படைத் தலைமையகத்தில் ஒரு கடற்படை கமாண்டர் இருந்தார். நல்ல உயரம். கருகருவென்ற தாடி. கடற்படைச் சீருடையில் அவர் அணிந்தால் அமையும் மிடுக்கு நான் இன்று வரையாருக்கும் அமைந்து பார்த்ததில்லை. பேசுவதற்கு மிக இனிமையானவர்.
அந்த ஆண்டு கடற்படை 1947ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு 'அதி ரகசிய (Top Secret) ஆணை'யின் பாதுகாப்பு நிலையை (Security Classification) குறைத்து, அதைத் திரும்பப் பெறத் தீர்மானம் செய்தது. இந்த முடிவை நிறைவேற்றும் விதமாக எல்லா அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது. குறிப்பு இது:

"எங்களது பதிவுகளிலிருந்து, இந்த 'அதி ரகசிய ஆணை' 1947ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் நாள் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக அறிகிறோம். இந்த ஆணைக்கு இப்போது எந்தப் பயனும் இல்லாததால் இதன் பாதுகாப்பு நிலையைக் குறைத்து இந்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் கோப்பில் இருக்கும் இந்த ஆணையை அழித்துவிட்டு, அழித்துவிட்டோ ம் என்று ஒரு சான்றிதழைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

என்னுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆணை கமாண்டரின் பிரிவில் இருப்பதாகத் தெரிய வந்தது. கமாண்டரிடம் குறிப்பைக் கொடுத்துத் தக்க பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து என் இயக்குநர் என்னைக் கூப்பிட்டார்.
"அனந்த், நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், இந்த முட்டாளை ஒரு குறிப்பும் எழுத விடாதே என்று?"
"அவரிடம் அப்படி முக்கியமானது ஒன்றும் கொடுக்கவில்லையே." "இது என்னது?" இயக்குனர் 1947 ஆணையைப் பற்றிய குறிப்பை என்னிடம் நீட்டினார்.
"இதில் என்ன முக்கியம் சார்?"
"ஆணை முக்கியம் இல்லை அனந்த். அனுப்பும் பதில் முக்கியம். இவன் என்ன பதில் அனுப்பியிருக்கிறான் என்று பார்."
பதிலைப் படித்ததும் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.
"எங்கள் பதிவுகளின்படி, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஆணையின் நகல் எங்களுக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. எனவே ஆணையின் நகலை உடனடியாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். நகல் கிடைத்தவுடன் அது உடனடியாக அழிக்கப்பட்டு, அழித்துவிட்டோ ம் என்ற சான்றிதழும் தரப்படும்."

கடற்படை அதிகாரிகள் தங்கள் கீழே வேலைபார்க்கும் அதிகாரிகளுடன் பேசும் விதமே தனி.
"கமாண்டர் ....... , இது என்ன? உன் மூளை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது? கால்களுக்கு இடையில் ஒரு துவாரம் இருக்கிறதே, அங்கேயா?"
"எனக்குப் புரியவில்லை, சார்."
"That is the problem. புரிகிறது என்ற வார்த்தையே உன்னுடைய அகராதியில் கிடையாது."
இயக்குனரின் அறையிலிருந்து திரும்பி வரும்போது கமாண்டர் என்னிடம் கேட்டார்.
"நான் என்ன தவறு செய்துவிட்டேன் கிருஷ்ணன்? எனக்கு உண்மையாகவே புரியவில்லை."
அவருக்கு என்ன பதில் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை.

2
திரு. இந்திரா பார்த்தசாரதி, தான் அமெரிக்கா சென்றபோது சுங்க அதிகாரிகளிடம் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை என்னிடம் சொன்னார்.
குடியேற்ற (immigration) அதிகாரிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் கேள்வி கேட்கும் பெண்ணிடம் இவ்வாறு கேட்டார்.
'Why are you treating me like this? Am I a convict?"
(என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? நான் என்ன சிறை சென்றவனா?)
அந்தப் பெண் இவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். உடனே தனது உயர் அதிகாரியை அழைத்தார்.
"இந்தப் பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். இவர் சிறை சென்றவராம்." அதிகாரி இ.பா.வைப் பிடித்துக்கொண்டார்.
"சிறை சென்றீர்களா? எங்கே? எப்போது? இங்கே அமெரிக்காவிலா? இந்தியாவிலா? வேறு எங்கே? எத்தனை வருடம்? எப்போது விடுதலை செய்தார்கள்? ஒரு தடவை சிறை சென்றீர்களா அல்லது பல தடவையா?"
இ.பா.விற்குத் தனது உண்மையான நிலையை விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நமது பத்தியின் புத்தகம் இத்தகைய அதிகாரவர்க்க முட்டாள்களையும் அமெரிக்காவின் பல தரப்பட்ட முட்டாள்களையும் பற்றி.
3
Unusually Stupid Americans என்ற புத்தகத்தை அமேசான்.காம் வலையகத்தில் பார்த்ததும் அதைப் படித்தாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. புத்தகத்தின் பெயர் The Usually Stupid Americans என்று இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் உடனே வந்தது. காத்ரின் மற்றும் ராஸ் பெட்ராஸ் எழுதிய இந்தப் புத்தகம் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு உலகின் சில மிகப் பெரிய முட்டாள்களையும் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் வாங்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒன்று அல்லது பல எச்சரிக்கைகள் இருக்கும். உணவுப் பொருளிலிருந்து வீட்டில் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பொருட்கள் வரை. இந்தப் புத்தகம் குறிப்பிடும் சில எச்சரிக்கைகள்:உபயோகிக்கும் தீயணைக்கும் கருவி ஒன்றில் கண்ட எச்சரிக்கை இது: தீ அருகிலோ தீப்பொறி பறக்கும் இடங்களிலோ உபயோகிக்கக் கூடாது.

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு மிக அதிகம் என்பது அங்கே விமானங்களில் பயணம் செய்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். செப்டம்பர் 11க்குப் பிறகு பாதுகாப்புக் கெடுபிடி எல்லா இடங்களிலும் மிக அதிகமாகிவிட்டது. அத்தகைய சில கெடுபிடிகள்:
JFK விமான நிலையத்தில் ஒரு கைக் குழந்தையின் தாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். காரணம் அவரிடம் மூன்று பால் பாட்டில்கள் இருந்தன. அந்தத் தாய் பாட்டில்களில் இருப்பது ரசாயனப் பொருள்கள் அல்ல, தாய்ப் பால்தான் என்று சொல்லியும் அதிகாரிகள் நம்பவில்லை. தாய் பாட்டில்களில் இருந்து பால் துளிகளைத் தன் கைகளில் பீய்ச்சித் தானே நக்கிக் காட்டுவதாகச் சொன்னார். ஆனால் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. பாட்டில்களில் இருக்கும் பால் முழுவதையும் குடித்துக் காட்டிய பிறகுதான் அவர் விமானத்தில் ஏறலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
சவுதி அரேபியாவிலிருந்து ஒரு பயணியின் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்த அதிகாரிகள், 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவர் 'கொலோன்' என்றார். அடுத்த கேள்வி: 'எப்படி நம்புவது?' அவர் அந்த பாட்டிலிருந்த திரவத்தைத் தன்மீது அடித்துக்கொண்டார். அதோடு நின்றிருக்கலாம். எதிரே நின்ற அதிகாரிகள்மீதும் அடித்தார். அவ்வளவுதான். உடனே ரசாயனப் பொருள்களைப் பரிசோதிக்கும் திஙிமி படை வரவழைக்கப்பட்டது. விமான நிலையத்தின் அந்தப் பகுதியில் வருகையாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதிகாரிகள் மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாட்டிலும் சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனைக்குப் பிறகு பாட்டிலில் இருந்தது கொலோன் என்பது தெரியவந்தது.
4
அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் நமது அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை இந்தப் புத்தகம் நிறுவுகிறது.

அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் தலைசிறந்த அங்கத்தினருக்கான விருது மார்க் க்ரெட்சென் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதற்காக வைக்கப்படும் விருந்திற்கு அவரை அழைத்துக் கடிதமும் அனுப்பப்பட்டது. ஒரே ஒரு சிக்கல். அவர் விருந்திற்கு வரும் நிலையில் இல்லை. பாலியல் குற்றம் ஒன்றிற்காக 26 வருடம் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவர் விருந்துக்கு வருவது சிறிது கடினம்தான்.

"என்னுடைய வெற்றிக்கு உங்கள் துணை நிச்சயம் தேவை" - இது அல் கோர் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு எதிராக 2000 தேர்தலில் நின்றவர்) - தனது வாக்காளர்களுக்கு அனுப்பிய கடிதம். கடிதத்தில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கடிதம் தவறான விலாசத்திற்கு அனுப்பபட்டுவிட்டது. கடிதத்தைப் பெற்றவர் கோரின் வெற்றிக்குத் துணை நிற்கும் வாய்ப்பு சற்றுக் குறைவாக இருந்தது. விலாசத்திற்கு உரியவரின் பெயர் ஜார்ஜ் புஷ்.
ஜான் கெரி - 2004 தேர்தலில் புஷ்ஷிற்கு எதிராக நின்றவர் - தனது வாக்காளர் ஒருவருக்கு 22 ஜனவரி 1991ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சுருக்கம்:

"உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். இராக்மீது ராணுவத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் அல்ல."
அதே வாக்காளருக்கு 31 ஜனவரி 1991ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சுருக்கம்:
"உங்களோடு கருத்தோடு உடன்படுகிறேன். இராக் மீது தாக்குதல் நடத்த நான் முழு சம்மதம் தருகிறேன்."

5
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அதிசயமான நிகழ்வு எனது பார்வைக்கு வந்தது. எங்களது சோதனைச் சாலைகள் ஒன்றில் ஒரு நண்பர் 25 ஆண்டுகள் வேலை பார்த்துப் பதவி உயர்வும் பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூடவே மாநில அரசுப் பணியில் கெஜட் பதிவுபெற்ற அதிகாரியாக 20 ஆண்டுகள் வேலை பார்த்ததுதான் தவறு. இந்த வழக்கு சிஙிமிஇடம் ஒப்படைக்கப்பட்டு நண்பருக்கு எதிராக வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

இந்தியாவிற்தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் - இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை.

அமெரிக்காவில் ஒக்லஹோமாவின் ஒராபானா என்ற சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்தார். ஊதியம் வருடத்திற்கு ஒரு லட்சம் டாலர்களுக்கும் மேல். 79 வருடம் அரசுப் பணிபுரிந்ததற்காக. ஒராபானாவின் வயது 52. அவரது ஓய்வூதியம் இரு அரசுப் பணிகளில் ஒரே சமயத்தில் இருந்ததற்காகத் தரப்பட்டுவந்தது. ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்தது, இத்தகைய ஊதியங்களை அனுமதிக்க ஒரு சட்டம் ஒக்லஹோமா மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று. சட்டத்தைத் தனிநபராகக் கொண்டுவந்து, அதன் சார்பாகப் பேசி அதை நிறைவேற்றியவர் வேறு யாரும் இல்லை, ஒராபானாதான்.

மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் (ஒக்லஹோமாவில்தான்) ஒரு தனிநபர் சட்டம் ஒன்று கொண்டுவந்து பெண்ணியத்தை மற்றொரு தளத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றார். அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால் எந்த ஆண்மகனும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் முன்னால் அவள் சம்மதத்தை எழுத்து மூலம் பெற வேண்டியிருக்கும். உடலுறவு உடலுக்குத் தீங்கானது, அதன் அபாயமான பின்விளைவுகளில் ஒன்று கருத்தரிப்பதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையையும் எழுத்து மூலம் அவளுக்குத் தர வேண்டியிருக்கும்.

6
அமெரிக்க அரசாணைகள் சிலவற்றைப் படித்தால் தலை சுற்றுவதைத் தவிர்க்க முடியாது. அவற்றில் சில:
தீயணைப்பு முறைகளைப் பற்றிய சுற்று ஒன்றில் காணப்படும் வாசகம்:
வெளியே செல்லும் வழி என்பது எந்த வழி வெளியேகொண்டு செல்கிறதோ அது.
தபால் துறையிலிருந்து வந்த கடிதம்:
தீவிர விசாரணைக்குப் பிறகு உங்களுக்குக் கடிதம் தாமதமாகக் கிடைத்ததற்குக் காரணம் அது வருவதற்குத் தாமதமானதால்தான் என்று தெரியவந்தது.
ராணுவ ஆணை ஒன்று. எனது நண்பர் கமாண்டர் படித்தால் மகிழ்ச்சியுற்றிருப்பார்:
இந்த ஆணை உங்களுக்கானது இல்லை என்றால், நீங்கள் இதன்மீது இட்டிருக்கும் கையொப்பத்தை அழித்துவிட்டு, அழித்துவிட்டேன் என்று கையொப்பம் இடவும்.
வருமானவரித் துறையின் சில ஆணைகள்:
ரம் டாலர்கள் பெற்றது தொழிற் சாலைக்குத் தீ வைக்க ஆலோசனை தந்ததற்காக.

7
இந்திய முட்டாள்களைப் பற்றி இப்படி ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று நினைத்துப் பார்க்கிறேன். சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாம் எல்லாவற்றையும் சாதி, மதம், இனம், மொழி கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்கள். இந்தக் கண்ணாடி நகைச்சுவை வடிகட்டி.

நான் இந்தப் புத்தகத்தைத் திருப்பதி செல்லும் வழியில் படித்துக்கொண்டு வந்தேன். திருமலை சென்றுவிட்டுத் திருச்சானூர் வந்தோம். அங்கு கோவில் மதிற்சுவரில் பார்த்த ஒரு ஆங்கில அறிவிப்பு:
Urinals strictly prohibited.
கழிப்பறைகள் ஏன் நமது நாட்டில் அதிகம் இல்லை என்பது எனக்குச் சற்று விளங்கியது. கோவில்களே கழிப்பறைக்குத் தடை விதித்தால் மக்கள் கழிப்பறைகளை உபயோகிக்கச் சிறிது தயங்கத்தான் செய்வார்கள்.
நன்றி-காலச்சுவடு-ஆகஸ்ட்-2006

Wednesday, November 08, 2006

எனது ஆறாவது கவிதைத்தொகுதி

இது எனது ஆறாவது கவிதைத் தொகுதி!
2005 ஆம் ஆண்டு இலங்கையின் கவனத்திற்குரிய பதிப்பகமான துரைவி பதிப்பக வெளியீடாக வெளிவந்த இத்தொகுப்புக்கு பேராசிரியர் கா.சிவதம்பி அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார்
.






விரைவில் பேராசிரியர் கா.சிவதம்பி அவர்களின் முன்னுரையை உங்கள் பார்வைக்கு தருவேன். இப்பொழுதைக்கு அத்தொகுதியிலிருந்து உங்கள் பார்வைக்கு ஒரு கவிதை!

  • மரணங்களின்

நேர்முகவர்ணனை

-செப்டம்பர்-11க்கு-

வெட்கத்தால் நாம்

தலைகள் குனியத்தான் வேண்டும்.

புதிய யுகத்தின் பிரஜைகளான,

உன்னதமான, நாகரிகமடைந்த

குலத்தினரான

நாம் வெட்கத்தால்

தலைகள் குனியத்தான் வேண்டும்.

நூற்றுக் கணக்கான

மனித உயிர்களின்

மரணங்களின்

நேர் முக வர்ணனையை

ஒலி ஒளிபரப்பாய்

பார்க்க, கேட்க கிடைத்த

யுகத்தில் வாழ்ந்ததற்காய்

வெட்கத்தால் நாம்

Sunday, November 05, 2006

வறுமையின் படம்

Image and video hosting by TinyPic

இங்கே-தெரிவது
வறுமையின் நிறம் அல்ல
உருவம்!
இது-
கவிதை அல்ல
நிஜம்!

என்றோ படித்த ஹைக்கூ




ரசித்த ஹைக்கூ

ஆலயமணி மீது

அமைதியாய் உறங்குகிறது

வண்ணாத்திப் பூச்சி!






என்றோ படித்த ஹைக்கூ!

மனதில் இன்றும் உட்கார்ந்து இருக்கிறது

படைப்பாளியின் பெயர் மறந்து விட்டது.

இதைதான் படைப்பாளியின் மரணம் எள்பதோ?

படைப்பாளியின் பெயர் தெரிந்நதவர்கள் சொல்லலாம்.

Sunday, October 22, 2006

கவிதைகள் இரண்டு

1. வன்முறை யுகத்தில்
என் முறை எப்பொழுது?

2.பேசினால்
அடிக்கிறார்கள்!
அடித்தால்தான்
பேசுகிறார்கள்!

இவை என் சிந்தனை வெளிப்பாடுகள். இனி வரும் காலத்தில் சக படைப்பாளிகளினதும் சிந்தனைகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
-மேமன்கவி-


பார்வைக்கு நேரம்

தர்சித்தவர்கள்